எறும்புகள் மனிதர்களின் கட்டிடக்கலையின் மூதாதை

மாங்கா மரத்துல மாங்கா திருடப் போயி, சூவ எறும்புகிட்ட கடிவாங்காத ஆளு உண்டா?

சின்ன வயசுல இருந்தே எங்கூட பாத்து பழகுன எறும்ப சமீபத்துல காட்டுலாவுல சந்திச்சேன்.

ஆமா சேமட்டான்குளம் கண்மாய் கரை சாலைய ஒட்டி மஞ்சநெத்தி, மா மரத்துல நிறைய கூடு இருக்கும்.
இப்போ அந்த மரம் எல்லாம் இல்ல, அதையெல்லாம் புடிங்கிட்டு இப்போ, தடுப்பு சுவர் கட்டிடாங்க.

எப்பவும் போல இல்லாம இந்த எறும்பு பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் அத கவனிச்சு என்னோட அலைபேசில படம்பிடிக்க ஆரம்பிச்சேன்.

என்னான்னா நா ‘ படம்பிடிக்கிறத அந்த எறும்புங்க ஒடனே கண்டுபிடிச்சுருச்சு. கூட்ல அங்கையும் இங்கையும் ஓட ஆரம்பிச்சுருச்சு.
அப்பப்போ நின்னு தலைய தூக்கி பார்க்குறதும், அதோட உணர் கொம்புகளை ஆட்டி ஆட்டி என்னோட வருகைய உணர ஆரம்பிச்சுச்சு…

சரி, இந்த எறும்புகள் கூட்டை குறித்து தகவல் சேகரிக்க தொடங்கினேன். அதற்காக என்னிடம் உள்ள “On A Trail with Ants” மற்றும் இணைய தள உதவிகளை நாடினேன்.

இதன் தமிழ் பெயர் நான் சிறுவயதில் கேட்டு அறிந்ததில் “சூவை எறும்பு” அல்லது சூவ எறும்பு” என்று சொல்வார்கள், அப்படியே நாங்களும் அழைப்போம். மேலும் சில பெயர்கள் “தையற்கார எறும்பு” “சிஞ்சிருக்கான்”. இதன் அறிவியல் பெயர் “Oecophylla smaragdina” மற்றும் ஆங்கில வழக்கு பெயர் “Weaver Ant”.

இவைகள் செம்மஞ்சள் அல்லது இளம் பழுப்பு நிறத்தில் கண்டுள்ளேன். தரையிலும் சுவற்றிலும் காணும் எறும்பு போல் அல்லாமல் இவைகள் தன் வாழ்வாதாரத்தை மரங்களில் (Arboreal) அமைத்துக் கொண்டுள்ளது. ஆகவே இயற்கையாக மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் எறும்புகள் எப்படி சிலந்திகள் போல் பட்டிழைகள் கொண்டு மரத்தின் இலைகளை இணைத்து கூடு கட்டுகிறது?

சரி வாங்க எப்படி கூடு கட்டுகிறது என்று பார்ப்போம்…

பொறியாளருக்கு நிகராக வேலைக்கார எறும்புகள் சரியான இலையை தேர்ந்தெடுக்கின்றன. இந்த தகவல் மற்ற வேலைக்கார எறும்புகளுக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. பின் அனைவரும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலையின் ஒரு முனையை பிடித்து இழுத்து மறு முனையில் இணைக்கிறனர். இது வலுவான பணி என்றால் அதை விட விசித்திரம் அந்த பட்டு இழைகள் கொண்டு ஓட்டுவது தான்.
இரண்டு முனைகளையும் ஒட்டவைக்க தேவையான பட்டிழையை கொடுப்பது எறும்புகளின் இளம் வளரிகள் அல்லது தோற்றுவளரிகள் (லார்வா) தான். இரண்டு முனைகள் இணைத்தவுடன் சில வேலைக்கார எறும்புகள் இளம் வளரிகளை சுமந்துகொண்டு இணைக்கப்பட வேண்டிய இடத்திற்கு வரும், பின் இளம் வளரிகளின் தலை லேசாக அழுத்தம் கொடுக்க, பட்டிழைகளை வெளியிடுகிறது இளம்ஸளரிகள். அதனை கொண்டு தேவையான இலைகளை சேர்த்து ஒட்டி கூடு அமைக்கிறது.
இந்த கூடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் காரணம் பழைய கூடு சேதமடைதல் அல்லது புதிய ராணியுடன் புதிய ராஜ்யம் தொடங்குதல் அல்லது காலனி விரிவாக்கம்.

இலைகளில் தான் கட்டும் என்றால் சமீபத்தில் வெப்பாலை மரத்தில் அதன் காயில் பட்டிழைகள் கொண்டு அழகாக கட்டியிருந்தது..

எறும்புகள் மனிதர்களின் கட்டிடக்கலையின் மூதாதை என்றால் அது மிகையாகாது…

Leave a reply