உயிர் பிழைத்திருக்க உருமறை தோற்றம்

Trimeresurus (Craspedosephalus) Travancoricus

மரங்கள் அடர்ந்த காடுகளை கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் நாங்கள் முகாமிட்டிருந்தோம்.

எப்போதும் போல் இரவு நேர காட்டுலாவிற்கு தயாரான குழு, அன்று எங்கள் பயணம் மலையில் வழிந்தோடும் ஒரு சிற்றோடையை அடைவதாக தீர்மானிக்கப்பட்டு நகரத் தொடங்கியது.

சிற்றோடையின் கரைகளில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்களால், நிலவின் ஒளி நிலம் தொட முடியாத காரிருள் சூழ்ந்த வனமாக காட்சி தந்தது. தவளையின் அழைப்பொலியும் நீரின் சலசலப்பில் அடங்கியிருந்தது.

அந்த இருள் சூழ்ந்த வனத்தில் எங்களை வழிநடத்தும் கைமின் விளக்குகள் மற்றும் நாங்கள் தலையில் பொறித்தியிருந்த தலைமின் விளக்குகள் துல்லியமாக முன் இருப்பவைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது.

நீரின் வழித்தடம் எங்கும் கூழாங்கற்கள் இல்லை இல்லை கூழாம் பாறைகள் நிறைந்து காணப்பட்டன. உருண்டு திரண்டிருந்த பாறைகள் யாவும் பாசிப்படர்ந்திருந்தன. இளம் பச்சை, வெளிர் பச்சை, இளம் பழுப்பு, அடர் பழுப்பாக திட்டு திட்டாக அதனூடே கருமை நிறமும் இணைந்து மேற்சொன்ன வண்ணங்களில் காட்சித் தந்தன.

எதை காண வேண்டும் அல்லது எதை காணக்கூடும் என்று பயணம் தொடங்கும் முன்பே பட்டியலிடுவது காட்டியலாளர்களின் வழக்கம்.

எங்கள் பட்டியலில் அது இருந்ததால் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கப்பட்டது, காரணம் அதன் தோற்றம். வழுக்கும் பாறைகளில் கால் இடறி கை தவறுதலாக கீழே அதன் மேலே வைக்கப்பட்டால் கணப்பொழுதும் தாமதிக்காமல் அது நம்மை தாக்கிடக் கூடும்.

குழுவில் ஒருவர் தனக்கு முன்னால் இருக்கும் ஒரு பாறை ஒன்றில் துல்லியமாக வெளிச்சத்தை காட்டி இதோ சட்டித் தலையன் என்றார்.

எப்போதும் போல் ஆர்வம் பீறிட்ரு. கவனமாக அதை நெருங்கி அனைவரும் கண்டோம்.

தான் வாழும் சூழலுக்கேற்ப உயிரியல் படிமலர்ச்சியின் கோட்பாடு அவ்வளவு கட்சிதமாக பொரிந்தியிருந்தது. அது கிடத்தியிருந்த தன் உடலும் பாறையின் நிறமும் அதன் வடிவங்களும் எளிதில் வேறுபடுத்திட இயலாத உருமறை தோற்றம் கொண்ட உயிரினத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு உயிரினமாக ஊர்வன வகையைச் சேர்ந்த இந்த டிரவங்கோர் சட்டித்தலையன் /குழிவிரியன் மிகச்சிறந்த உயிரினமாக கூறலாம்.

இந்த உருமறை தோற்ற இயல்பு என்பது அந்த உயிரினத்தின் வாழிடத்தில் வேட்டை விலங்காகவும், வேட்டை விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளும் இயல்பாகவும் இயற்கை தந்த உயிரின படிமலர்ச்சியின் வாழியல்பு.

படைப்பு

.பு. இரா. விசுவநாத்

Leave a reply