அரத்தவளை (அ) தலப்பிரட்டை

அரத்தவளை (அ) தலப்பிரட்டையை மேகலையில் இயற்கையாக ஊற்றெடுத்து ஓடிவரும் நீரோடையில் கண்டதும் எனது சிறு வயது நினைவுகளை கிளரிவிட்டப்படி மனிதனின் வாழ்க்கை முறை மாற்றம் எவ்வளவு இயற்கை மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்ற எண்ணத்தை எழுப்பியது.

ஆம் அப்போது நான் டவுசர் அணியும் வயது பையன் தான்.

வீட்டின் அருகே மழைக்கால இரவுகளில் சாலையில் தேங்கிய மழைநீரில் காதல் ராகம் இசைத்தபடி இரவு முழுவதும் க்ரோக் க்ரோக் என மழை ராகத்தை தவளை மொழியில் இனிய குரலில் கேட்டுக் கொண்டே துயில் கொள்வதும் வழக்கமான ஒன்று தான்.

காதல் கானம் ஒலிபரப்பு இணைசேரும் காலம் வரை மட்டுமா இல்லை மழைக் காலம் முடியும் வரையிலா என்று பிரித்து அறிய இயலாத சிறு பையன் அன்று.

பின் சில நாட்களில் மீன் குஞ்சுகள் என நினைத்து அதே சாலையில் தேங்கிய அதே மழை நீரில் நீந்திய அரத்தவளைகளை பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் கண்ணாடி குவளைக்குள் போட்டு வளர்த்த என் நினைவுக்குறிப்புக்குள் அடங்கிய அனுபவக்காட்சிகள் கண்முன்னே ஓடத் தொடங்கியது.

அறிவு பகுத்து ஆய்வு செய்தது ஏன் இன்று அதே சாலையில் அப்படி ஒரு காட்சி காணக் கிடைக்கவில்லை.

வாகனப் பெருக்கம் இல்லாத காலம் அது…

சாலையில் நீர் தேங்குவதை பெரிதாக அரசியல் படுத்த முயற்சிக்காத காலம் அது…

தேங்கிய மழைநீரில் தாவிக் குதித்து விளையாடிய காலம் அது, #ஹைஜீன் என்ற விளம்பர வார்த்தைகள் எங்களுக்கு பரிட்சயமாகவில்லை.

காகிதக் கப்பல் விடப்பட்டு சாலையில் நீர் தேங்கியதை கொண்டாடிய மழலைக்காலம் அது.

மழை நீர் தேங்கியிருப்பதைக் கண்டு அச்சம் கொண்டதில்லை.

கதிரவன் நீரை ஆவியாக்கி குடித்தும்
நிலம் நீரை தேவையென்ற அளவில் உறிந்து குடித்தும் நீர் வற்றிய காலம் அது… யாரும் இறைத்து வெளியேற்றி செயற்கையாக வற்றச் செய்யவில்லை…

தலப்பிரட்டை இல்லை நீ
எனைக் கொல்லத் துடிக்கும்
கொசுவை கொசுப்புலுவை கொன்றுதிங்க!!!

Leave a reply