பாம்புகள் பின்னோக்கி அதே வேகத்தில் இயங்க முடியுமா?

பாம்புகள் முன்னோக்கி வேகமாக ஊர்ந்து செல்லும் தன்மையை பெற்றாலும் அதனால் பின்னோக்கி அதே வேகத்தில் இயங்க முடியுமா?? தாங்கள் ஆய்வு செய்துள்ளீர்களா?? என்ன காரணம்? பெரும்பாலும் கிராமங்களில் பாம்பு கடித்தால் பூச்சி கடித்துவிட்டது என்கிறார்கள் அதன் பொருள் என்ன??

திரு. #கோவிந்தராஜ் அவர்களின் கேள்விக்கு பதில்… நான் அறிந்த வரையில்…

பல்லுயிர்களின் இயல்புகள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது (Behavioral Study). அதில் யாம் கற்றுணர்ந்த, நேரில் கண்டுணர்ந்த செய்திகள் கொண்டு பதில் கூற முற்பட்டுள்ளேன்.

முதலில் பாம்புகளின் ஊர்ந்து செல்லும் இயல்பு மற்றும் உடல் மொழியை பார்ப்போம்.

பெரும்பாலான உயிரினங்கள் நகர்தல் அல்லது பயணித்தல் என்ற செயல் அவசியமாகப் படுவது இரையை தேடி, இருப்பிடம் தேடி, இணையை தேடி, போன்ற பல காரணங்கள்.
அதில் உணர்ந்து செயல்பட உடலில் சில உறுப்புகள் உதவுகின்றன (உ. தா. கண், காது, மூக்கு, நாக்கு). இவ்வுறுப்பு உடலின் முன் பகுதியில் அமைந்துள்ளது. ஆகையால் இலக்கை அடைய முன்னோக்கி நகர்தல் என்ற விதி பெரும்பான்மையாக உள்ளது.

சரி பாம்பின் ஊர்ந்து செல்லும் இயல்பை நோக்குவோம்.

கால்கள் இல்லா ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகள் தன் உடல் மேற்பகுதியில் பல வகையான செதில்கள் (Scales) கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது. அதில் ஊர்ந்து செல்லுதல் செயலுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ஒன்று பாம்பின் கீழ் பகுதி (Ventral Scales) செதில்கள். அதன் இயற்கை அமைப்பை உற்று நோக்கினால் செதில்கள் அடுக்கடுக்காக சொருகப்பட்ட பின் உள்ள செதில்கள் முன் உள்ள செய்திகளுக்கு கீழ் சொருகப்பட்டது போல் இணைக்கப் பட்டிருக்கும். இந்த அமைப்பு பாம்புகள் ஊர்ந்து செல்லும் போது பிடிமானமாக இருந்து முன்னோக்கி நகர உதவுகிறது. மேலும் அதோடு இணைந்துள்ள முதுகெலும்பு, விலா எலும்பு மற்றும் தசை நார்கள் அனைத்தும் சேர்ந்து பாம்புகள் ஊர்ந்து செல்ல உதவுகிறது.

பாம்பின் கண்கள் மற்றும் புற சூழல் உணரும் உறுப்புகளான நாக்கு அதன் மூலம் காற்றில் உள்ள துகள்கள் சேகரித்து ஜெகோபின் ஆர்கன் மூலம் முகர்தல் (Jacobins Organ), அதிர்வலைகள் உணரும் தாடை எலும்பு அனைத்தும் பாம்பின் முன் பக்கம் உள்ளன. ஆகையால் பாம்புகள் முன் நகர்வது போன்று வேகமாக பின் நகர்வது இயலாது, மேலும் அது அவைகளுக்கு தாங்கள் சேகரித்து வைத்துள்ள சக்தியை முன் நோக்கி நகர்வதற்கு செலவிடும் சக்தியை காட்டிலும் பின் நோக்கி நகர்தல் அதிக சக்தியை செலவிட நேரும் மற்றும் இலக்கு குருடாக்கப் படுகிறது.
எனவே பாம்புகள் பின்னோக்கி நகர்தல் என்ற செயல் பெரும்பாலும் தவிர்ப்பதாகவே உள்ளது.

பாம்புகள் ஊரும் உடல் மொழி என்று சில வகைகள் குறிப்பிடப் பட்டுள்ளது.

1. Serpentine Method or Lateral Undulation (வளைந்து நெளிந்து செல்லும் முறை):
இந்த முறையில் பாம்புகள் தங்கள் உடலை அலை போன்ற வடிவில் வளைந்து நெளிந்து முன்னேறி நகர்கிறது. அனைவருக்கும் பரிச்சயமான பாம்பின் உடல் மொழி.

2. Concertina Method (சுருங்கி பின் விரிதல் முறை): இம்முறையில் பாம்புகள் தங்கள் உடலின் ஒரு பகுதியை மேல் எழுப்பியும், மறு உடல் பகுதியை நிலைநிறுத்தி அலை வடிவில் சுருக்கி பின் முன்னோக்கி உடலை தள்ளும் / இழுக்கும் செயலால் முன் நகர்கிறது. இந்த வகை ஊர்ந்து செல்லுதல் பார்த்தால் சுருங்கி விறிதல் போன்ற தோற்றத்தை கொடுக்கும்.

3.Sidewinding (பக்கவாட்டு நகர்வு முறை) : மணல் பாங்கான அல்லது வழுக்கும் தரை பகுதியில் இம்முறையை பயன் படுத்தி பாம்புகள் சிறப்பாக ஊர்ந்து செல்கின்றன. இது அலை போல் வளைந்து செல்லும் ஆனால் தலையை தரையில் இருந்து உயர்த்தி பக்கவாட்டில் முன் கிடத்தும் பின் அதை பின் உடல் இரண்டு முனைகளில் மட்டுமே தரையுடன் தொடர்பு கொண்டு இருக்கும், மற்ற பகுதி தரையில் இருந்து உயர்த்தி தொடர்ந்து அலை வடிவில் நகர்ந்து கொண்டிருக்கும். உதாரணம் SIDEWINDER RATTLE SNAKE.

4. Rectilinear Method (நேர்கோட்டு ஊர்ந்து செல்லும் முறை) இம்முறையில் பாம்பு வளைந்து செல்லாமல் சீரான நீண்ட உடல் அமைப்பில் தன் உடலுக்கு கீழ் உள்ள செதில்கள்(Ventral Scales), உயர்த்தப்பட்டு முன்னோக்கி இழுக்கப்பட்டு பின் தரையில் கிடத்தி பின் இழுத்து முன் நகர்கிறது.
உடலின் கீழ் செதில்கள், பக்கவாட்டு தசை மற்றும் விலா எலும்பு உதவியுடன் இச்செயல் நடைபெறுகிறது. இந்த வகை ஊர்தல் பெரும்பாலும் பெரிய பாம்புகளான மலைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு போன்றவை இந்த முறையில் அழகாக சத்தம் எழுப்பாமல் ஊர்வதை பார்த்துள்ளேன்.

எங்கள் மீட்பு பணியின் போது நல்லபாம்பு, சாரப்பாம்பு (உ.தா) போன்ற பாம்புகள் எங்களை பார்த்ததும் முன் பாதி உடம்பை தரையில் இருந்து உயர்த்தி மெதுவாக பின் இழுத்து வால் முனை பக்கம் தலையை திருப்பி வேகமாக ஓட்டம் பிடிக்கும். இது முன் பக்க உடல் பின் நோக்கி எழுக்கும்
மேலும் மண்ணுளிப்பம்புகள் எலி வலைக்குள் இருந்து வெளியேற சிறிது தூரம் பின்னோக்கி நகரும் என்று கேள்விப்பட்டுள்ளேன். கண்டதில்லை.

பதில் சுருக்கம் : பாம்புகளால் முன்னோக்கி நகர்வது போல் வேகமாக பின் நோக்கி நகர்தல் இயலாது.

கேள்வி : 2 பெரும்பாலும் கிராமங்களில் பாம்பு கடித்து பூச்சி கடித்துவிட்டது என்கிறார்கள் அதன் பொருள் என்ன?
பாம்பின் உருவம் போல் பெரும்பாலான மக்களுக்கு (கிராமம் மற்றும் நகரம் உட்பட) பாம்பென்ற சொல்லும் பயம் தான். பாம்பென்று உச்சரித்தால் பாம்பு கண்ணில் தென்பட்டு விடும் அல்லது நம்மை வந்து தீண்டிவிடும் என்ற மூட நம்பிக்கை. ஆகையால் பெரும்பாலும் பாம்பை பூச்சி என்றே குறிப்பிடுவர்.
வெள்ளிக்கிழமை பாம்பு என்று சொன்னால் பாம்பு கண்ணில் படும் அல்லது வீட்டுக்கு வரும் என்ற மூடநம்பிக்கையும் உள்ளது.
நல்ல பூச்சி(நல்லபாம்பு), சார பூச்சி(சாரைப்பாம்பு) என்று எங்களுக்கு மீட்பு அழைப்பு விடும் நபரிடம் இருந்து கேட்டுள்ளேன்.

மேலும் இக்கேள்விக்கு வேறு தகவல் இருந்தாலும் வரவேற்கிறேன், அறிந்து கொள்ள ஆசை…

படைப்பு
பு.இரா. விசுவநாத்

Leave a reply