இரண்டு முட்டைகள் வெட்டவெளியில்…..

அண்ணா!
இரண்டு முட்டைகள் வெட்டவெளியில், சுட்டெரிக்கும் வெயிலில் கிடக்கிறது எடுத்து வரவா? பார்க்க பாவமாக இருக்கிறது என்றான் தம்பி பாரதி விக்னேஷ் .
வேண்டாம்! முட்டைகளை கையால் தொடவோ, எடுக்கவோ வேண்டாம். முட்டையிடம் இருந்து சற்று விலகி வரவும், பின் தூரத்தில் ஏதேனும் பறவைகள்(பெற்றோர்) உள்ளதா என்று கவனிக்க சொன்னேன்.
பதில் அப்படி ஒன்றும் இல்லை அன்ணன்.
சுட்டெரிக்கும் வெயிலால் சூடேறிய தரையில் முட்டை (பாயில்) வெந்துவிடாதா அண்ணன்.
இங்கே பல உயிர்கள் பல விதமான சிறப்பியல்புகளை தன் வாழியல்புகளாக கொண்டுள்ளன. அப்படி ஒன்று தான் ஆட்காட்டி பறவை இனங்கள்.

நேரில் சென்று உறுதிப்படுத்த தம்பியுடன் முட்டை இடப்பட்டிருந்த வெட்டவெளிப்பகுதிக்கு மாலை 4 மணிக்கு சென்றோம்.
முட்டைகளை நெருங்கும் முன் சற்று தொலைவில் எங்கள் வாகனத்தை நிறுத்தி சுற்றி என்ன பறவைகள் இருக்கின்றது என்று உற்று நோக்கினேன்.
எதிர்பார்த்த படியே எங்களை திசைதிருப்ப ஆண் மற்றும் பெண் சிவப்பு மூக்கு ஆட்காட்டி பறவைகள் ஆளுக்கொரு திசையாக மெதுவாக நகர்ந்தது. புகைப்படம் மூலம் ஆவணப்படுத்திக் கொண்டோம்.

முட்டைகள் சிறப்பு வண்ணங்களான வாழிட நிறத்தில் (நிலத்தின் நிறம்) உருமறை தோற்ற முட்டை ஓட்டின் நிறத்தால் முட்டையை எளிதில் கண்டடைய முடியவில்லை. இது தான் பரிணாம வளர்ச்சியின் வெற்றி, வேட்டை விலங்கிடம் இருந்து முட்டைகள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வது.

கூடும் அப்படித்தான், சிறப்பான ஏற்பாடு ஏதும் இன்றி(குச்சி, சருகுகள்,நார்கள், பிளாஸ்டிக் பொருட்கள்) வெறும் தரையில் முட்டைகள் அடைகாக்க ஏதுவாக மட்டப்படுத்தி இருந்தது.

தம்பி மட்டும் பார்க்கையில் இரண்டு முட்டைகள், நாங்கள் இருவரும் சென்று மாலை சென்று பார்க்கையில் 3 முட்டைகள் இருந்தன. அன்று தான் பெண் பறவை முட்டைகள் ஒவ்வொன்றாக இடத்தொடங்கி இருக்கின்றது.

முட்டைகளை அதன் வாழிட சூழலோடு புகைப்படம் எடுக்க தரையில் குப்புற படுத்தேன், ஆகா கொதிக்கும் வெப்பத்தால் உடல் சுடத்தொடங்கியது.

முட்டைகள் பாதுகாப்பாக அடைகாக்கப்பட்டு, குஞ்சுகள் பொரிந்து, உணவுச்சங்கிலி இணைப்பில் இயற்கையை பாதுகாக்க இணையட்டும்…

ரியல் எஸ்டேட் பூதம் அந்நிலத்தை விழுங்கும் முன்.

எழுத்து – விஸ்வா
ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழு
Red wattled lapwing eggs
Vanellus indicus

Leave a reply