
கருநாகத்தின் காதலன் முனைவர் கௌரி சங்கர், ஊர்வன ஆராய்ச்சியாளர் SR கணேஷ் மற்றும் காளி சென்னையில் மூன்று ஆளுமைகளுடன் இரண்டு நாட்கள் ஊர்வன குறித்த புதிய தகவல்களை அறிந்துகொள்ள எனக்கு உதவியது.
கொரி சங்கர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுகு, துளு, ஆங்கிலம், ஹிந்தி மொழியிலும் தேர்ந்தவராக உள்ளார்.
கருநாகங்களுக்காக (ராச நாகம்) தனது வாழ்க்கையை அற்பணிதுள்ளார் என்றால் மிகையாகாது. ஒருமுறை கருநாகப் பாம்பை மீட்க சென்ற இடத்தில்

அதனிடம் கடி வாங்கியுள்ளார். கருநாகங்களின் கடியிலிருந்து உயிர் தப்புவது அவ்வளவு எளிதன்று. மூன்று கருநாகங்களை மீட்க சென்ற இடத்தில் இரண்டு பாம்புகளை ஒரு பைக்குள் அடைந்துவிட்டார் காரணம் அவரிடம் இருந்தது ஒரு மீட்புப்பை. மற்றொரு கருநாகத்தை பிடித்து அடைக்க பை இல்லாததால் அருகாமை குடியிருப்பில் இருந்தவர்களிடம் சாக்குப்பை ஒன்றை வாங்கி அதில் அடைக்க முனைந்துள்ளார்.பத்தடி பாம்பிற்கு அந்த சிறிய கோணிப்பை அடைக்க போதுமானதாக இல்லை. தலை உள்ளே சென்றவுடன் மெல்ல மெல்ல உடலை உள்ளே தள்ளியுள்ளார். திடீரென தன் மாணிக்கட்டினருகே ரத்தம் இருந்ததை உணர்ந்தவர் பாம்பிற்கு ஏதும் அடிப்பட்டுவிட்டதோ என்று முதலில் நினைத்துள்ளார், அதன் பின் தான் பாம்பு பையிலிருந்து நழுவி உள்ளே இருந்தவாறு தனது கையை பதம்பார்த்துள்ளது என்பதை உணர்ந்துள்ளார். ஆம் அடைத்த பையின் மறுமுனை வரை சென்ற பாம்பு அப்படியே மீண்டும் பையின் வாய்பகுதிக்கே திரும்பியுள்ளது. கடிப்பட்ட பின் பாம்பை லாவகமாக அருகில் உள்ள விறகு குவியலுக்குள் விடுவித்துவிட்டு, மனதிற்குள் திரும்ப வந்து பிடித்துக் கொல்லாலாம் என்று எண்ணியவாரு அவரின் நண்பரின் துணையோடு மருத்துவமனை விரைந்துள்ளார் . இதை கூட்டத்தின் முன் சொல்லி முடித்து விட்டு, தான் ஒரு பாம்புகளின் ராஜாவிடம் கடிபட்டுள்ளேன் என்று துளி கூட பயமில்லாமல் மீண்டும் வந்து பாம்பை பிடித்துக் கொள்ளலாம் என்று அசட்டு தைரியத்தில் எப்படி நினைத்தேன் என்று சொன்னவுடன் கூட்டத்தில் சிரிப்பலை.
சாதாரணமாக நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவரியன், சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு நச்சு முறிவு மருந்து உள்ளது, கருநாகப்பாம்பு கடிக்கு மாற்றுமருந்து கிடையாது. இந்த சூழ்நிலையில் கருநாகம் கடித்ததோ மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில், அங்கிருந்து மருத்துவமனை செல்வதென்றால் குறைந்தது மூன்று மணிநேரம் ஆகும். எனினும் திரு. கௌரி சங்கர் தனது அசாத்திய தைரியத்தால் எவ்வித அச்சமும் இன்றி முழு சுயநினைவுடன் தனது நண்பரின் உதவியுடன் மருத்துவமனை சென்

றடைந்துள்ளார். அங்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின் கருநாகங்களின் மாற்று மருந்து(நச்சு முறிவு மருந்து) கிடைக்கக்கூடிய இந்தோனேசியாவில் இருந்து உடனடியாக மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த கருநாகப்பாம்பு நச்சுமுறி மருந்து ஏற்றியபோதிலும் உடல் உபாதைகள் ஏற்பட்டு, இந்தோனேசிய கருநாகப்பாம்பு நச்சுமுறி மருந்து இந்திய கருநாகத்தின் கடிக்கு பலனளிக்கவில்லை. மூன்று நாள் போராட்டத்திற்கு பின் மரணத்தில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். சாக்குப்பை வழியே கடித்ததால் பாம்பின் கடி முழுவதுமாக இல்லாமல் அதன் வீரியமிக்க நஞ்சை செலுத்த தடையாக சாக்குப்பை இருந்தமையாலும், சட்டென கையை கடியில் இருந்து விலக்கியதாலும் அவருக்கு கடியின் முழுமையான பாதிப்பு ஏற்படவில்லை.
கௌரி சங்கர் மரணத்தில் இருந்து விடுபட்ட தருணத்தில் தனக்கு ஏன் இந்தோனேசிய மாற்றுமருந்து பாதிப்பை குறைக்கவில்லை என்று எண்ணத்தொடங்கினார். இந்தியா முதல் பிலிப்பைன்ஸ் வரையில் அதாவது தெற்காசிய முழுவதும் ஒரே கருநாகப்பாம்பு இனம் இருப்பதாக கருதப்பட்டு வந்த சூழலில், இவரின் கருநாகப்பாம்பு இன வரையியல் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு 185 ஆண்டாக நம்பப்பட்டு வந்த கருநாகப்பாம்பின் புதிர் முடிச்சு அவிழ்க்கப்பட்டது.
கௌரி ஷங்கர் தனது முனைவர் பட்டம் ஆய்விற்காக தெற்காசிய நாட்டில் இருக்கக்கூடிய கருநாகங்களை அதன் மரபியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து இருநூறு மாதிரிகளை கருநாகங்கள் வாழும் பல நாடுகளில் இருந்து சேகரித்து அதன் விளைவாக கருநாகங்கள் நான்கு இனங்கள் உள்ளதாகவும் அவைகள் முறையே இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுபவை கலிங்கா கருநாகப்பாம்பு, வடக்கு, கிழக்கு இந்தியா, மியான்மர், சீனா நாடுகளில் காணப்படுபவை வடக்கு கருநாகப்பாம்பு, மலேசியா இந்தோனேசியாவில், தென் மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படும் பாம்பு சுந்தா கருநாகம் மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படுவது லூஸான் கருநாகப்பாம்பு எனப்படுகிறது.
இங்கு கருநாகப்பாம்பு என்று நான் கூறுவது ராஜநாகம்.

காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையின் புறநகர்ப்பகுதியில் உள்ள வடநெம்மேலி நோக்கி கௌரி சங்கர் தலைமையிலான குழு விரைந்தது. ஆம் முதல்நாள் அரங்கிற்குள் கற்ற பாடத்தின் இரண்டாம் பகுதியாக களப்பயிற்சி. இந்த பயிற்சியினை வழங்க நமது மண்ணின் பூர்வக்குடி இருளர் இனப்பழங்குடி இனத்தை சேர்ந்த காளி, அவரது மனைவி அலமேலு மற்றும் உறவினர் சித்தார்த் அங்கு நமக்காக வருகைதந்திருந்தனர். அருகில் தான் இருளர் குடியிருப்பும் அமைந்துள்ளது. பாம்பு மறைந்திருக்கும் பொந்துகளை துலாவிட ஒரு சிறு கடப்பாரை, புதர்களை விளக்கிட ஒரு அரிவாள், இந்த இரண்டு ஆயுதங்களை கொண்டு மட்டும் இல்லாது தங்களின் மரபு வழி கிடைத்த அறிவுகொண்டு பாம்புகளின் தடம், வாசனை, தடயங்கள் (தோல், கழிவு) கொண்டு வாய்வெளி அருகில் உள்ள புதர் மேட்டில் துலாபவிக்கொண்டு இருந்தனர். இந்த சமயம் எங்களுக்கு பாம்புகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் கௌரி சங்கர். பாம்பு உரித்த தோல்களை கொண்டு எப்படி பாம்பினங்களை கண்டுபிடிப்பது என்பதை அறிந்துகொண்டோம். தோலுரிக்கும் நிலையில் நாங்கள் நட்டுவாக்காளி ஒன்றை கண்டோம், அதை வைத்து கெரி ஷங்கர் விளக்கமளித்தார்.
தனது கடும் முயற்சியால் இடைவிடாது பாம்புகளை மண்ணை கிளறி கிளறி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காளி துலாவினாலும் அன்று எங்கள் கண்ணில் பாம்பு எதுவும் சிக்கவில்லை. காளி அவர்களுக்கு இது தர்மசங்கடமான தருணமாக உணர்ந்தார் என்று அவரின் நடவடிக்கையில் தெரிந்தது காரணம் இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக மஹாராஷ்ட்ரா, தெலங்கானா, ஆந்திரபிரதேஷ், டில்லி, கொல்கத்தா, மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் வருகைதந்திருந்ததும், அவர்களுக்கு பாம்புகளை காண்பிக்காதது ஏமாற்றமாகும் என்று அவர் நினைத்து இருக்கலாம். நாங்கள் போதும் என்றாலும் அவர் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தார்.

இதற்குப் பின் பாம்புகளை அறிவியல் துணையுடன் அடையாளம் காணுதல் குறித்த பயிற்சினை இந்தியாவின் ஊர்வன ஆராய்ச்சியில் முன்னோடியான முனைவர் SR கணேஷ் அவர்கள் பல அறிய தகவல்களை எங்களுக்கு வழங்கினார். பாம்பின் உடலமைப்பு, செதிலமைப்பு, செதில் வரிசையை கணக்கிடும் முறைகள் என பாம்புகளை இனவாரியாக அடையாளம் காணும் முறைகளை கற்பித்தார்.
இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை எங்களுக்கு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து தந்திருந்தவர்கள் கலிங்கா பவுண்டேசன் – கலிங்கா மழைக்காடு சூழலியல் ஆராய்ச்சி மையம், பே ஆப்ஃ லைஃ, ஆக்டு தேகப்பயிற்சி மையம் வளாகம்.
எனது சிறப்பு நன்றிகள் கௌரி சங்கர், கணேஷ், காளி, பிரியங்கா, அலமேலு, சித்தார்த், சௌகத், யாசின் பாத்திமா, பிரேம் மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி.
இந்த பயிற்சியில் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு பக்கபலமாக கடலூர் ஹெல்ப் டுடே செல்லா தம்பிகள் சத்யா பிரகாஷ், சீனி மற்றும் சேலம் இடப்படியில் இருந்து அஜித் இருந்தனர். இந்த பயிற்சிக்கு எங்களிடம் பணம் ஏதும் பெறவில்லை, எங்கள் ஐந்து நபர்களுக்கு மட்டும் இலவசமாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் ஊர்வன குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தால் கலிங்கா பவுண்டேசன் வலைதலித்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் இந்த முகாமிற்கு நடுவே எங்களை எண்ணூர் சதுப்புநில பகுதிக்கு அழைத்து சென்ற திரு. அரவிந்த் மனோஜ் அவர்களுக்கு நன்றி. நாய்த்தலையன் பாம்பை காணத்தான் சென்றோம், தரிசனம் தரவில்லை . கிடைத்த சேத்தூளுவை (மட் ஸ்கிப்பர்) காணும் வாய்ப்பு கிடைத்தது.
சென்னை பயணக்கட்டுரை 22.03.2025 & 23.03.2025
கட்டுரையாளர்
விஸ்வா
9940832133 / 8608700088