பல்லி சொல்லும் பலன்

#பல்லிசொல்லும்பலன்
உங்கள் வீட்டில் பதுங்கிய நான், விளக்கு வைக்கும் நேரத்தில் விழித்து, ராந்தல் விளக்கும், மின் விளக்கும் ஈர்த்த பூச்சிகளை வயிறு புடைக்க உண்ட சந்தோசத்தில் சிக் சிக் சிக் என்று என் மொழியில் பாடி மகிழ! திறந்தது ?
பெரும்பாலும் சுவற்றின் அந்தரத்திலும் பக்கவாட்டிலும் ஏறி என் இரை பிடிக்க விரைவேன், சுவற்றின் மேல் சக பல்லிகளுடன் சண்டை போடுவேன் தவறுதலாக விழுந்தால்!
திறந்தது ?
எது திறந்தது?
பல்லி பஞ்சாங்கம்
கவுலி சத்தம் கேட்கும் திசையில் பலன் பார்க திறந்தது பல்லி பஞ்சாங்கம்
விழுந்தது தலையிலா? தொடையிலா? தோளிலா? அதில் இடப்பக்கமா? வலப்பக்கமா? அதில் பலன் பார்க்க
திறந்தது பல்லி ‌‌பஞ்சாங்கம்.

முக்கியமான பேச்சின் முடிவுக்கு இடையில் நான் எழுப்பும் சிக் (ஒருதரம்) சிக் (ரெண்டுதரம்) சிக்(மூனுதரம்) நல்ல சகுனம் என்று போற்றி புகழும் நீங்கள் தான் என்னை உங்கள் வீட்டை விட்டு விரட்ட முட்டை ஓடுகளை பரன்மேல் வைப்பீர்.

அந்துருண்டைகளும் இரசாயன உருண்டைகளும் வைத்து இயற்கையாய் பூச்சிகளை கட்டுப்படுத்தும் எங்களை(பல்லிகளை) விரட்டும் உங்கள் முயற்சி.

உங்கள் பார்வையில் நாங்கள் அருவருப்பான ஒரு உயிரினம். நான் தவறி விழுந்த உணவு விசமாகாது, மாறாக எங்கள் மீதான அருவருப்பு எண்ணம் வாந்தியை தூண்டி, உடல் நீர் சத்து இழந்து மயங்கிய காரணம், என் உடல் விசம் என்று பொய் புகாருக்கு சாட்சியம் ஆனது. இயல்பில் எங்கள் உடலில் நஞ்சு சுரப்பதில்லை.

வாள் மனிதர்களுக்கு தற்காப்பு ஆயுதம், அதுபோல் எங்களுக்கு வால். எங்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க வாலை ஆயுதமாக பயன்படுத்துகிறோம். ஆம் எதிரிகள் வாலை பிடித்தவுடன், தன் உடலில் இருந்து துண்டித்து தப்பிக்கும். மேலும் வாலானது சில நிமிடங்கள் துடித்து பின் அடங்கும்.
நீங்கள் பல்லியை பிடித்து விளையாடியவராக இருந்தால் அனுபவம் கிடைத்து இருக்கும். மீண்டும் சில வாரங்களில் புதிய வால் முளைத்து விடும்.

பூரான்களும், சிலந்திகளும், கரப்பான்களும் இன்ன பிற பூச்சிகளும் பெருகுவதை எங்களால் கட்டுப்படுத்த படுகிறது உங்கள் வீடுகளில் மற்றும் சூழலில்.

உங்கள் உதட்டின் ஓர கொப்பளங்கள், எங்கள் சிறுநீர் காரணமா? என்றால் இல்லை அது Herpes simplex virus (HSV), ஹெர்ப்ஸ் சிம்ப்லெக்ஸ் வையரஸ்.இனி எங்கள் மேல் பழி சுமத்தி எங்களை உங்கள் வீட்டில் இருந்து விரட்ட வேண்டாம்.

எங்களை கண்டதும் அலறியது போதும்!
கடந்து செல்லுங்கள் நாங்கள் உங்கள் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என்று.

Leave a reply