அந்த காட்டில் தேவாங்குகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த காடுகள் கிழக்கு மலைத் தொடர்களில் அமைந்துள்ளது.
இந்த தேவாங்குகள் இருந்தால் தான் அந்த காடுகள் உயிர்ப்புடன் இருக்கும் என்பதும், அந்த காடுகள் இருப்பதால் தான் அங்கு தேவாங்குகள் இருப்பதும் இரண்டும் ஒன்றை ஒன்று இயற்கையாகவே பிரித்திட முடியாதவையாக உள்ளது.
இந்த இரண்டையும் பாதுகாக்க சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளையில்) வழக்குரைஞர் திரு.புஷ்பவனம் அவர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில் நீதிபதிகள் திருமதி. புஷ்பா சத்ய நாராயணன் மற்றும் P.வேல்முருகன் அவர்களின் ஆணை ஒன்றினை தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கப்பட்டது.
அந்த ஆணைப்படி தேவாங்குகளின் வாழிடம், பரவல் மற்றும் அவைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆராய்ந்து ஆய்வறிக்கையை 2022, மார்ச் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஆணையிட்டது.
இதற்காக தமிழ்நாடு வனத்துறை திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் முறையே உள்ள அய்யலூர் மற்றும் கடவூர் வனங்களில் மற்றும் இதர திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டகளில் கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் நானும் கலந்துகொண்டது, பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேற்குறிப்பிட்ட பகுதிகள் விரைவில் தேவாங்கு சரணாலயம் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று என்னைப்போல் பல இயற்கை ஆர்வலர்கள் காத்திருக்கிறோம்.
இதற்கு தொடக்கமாக இருந்த வழக்குரைஞர் திரு.புஷ்பவனம் அவர்களுக்கும், அதனை ஏற்று உத்தரவிட்ட நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு கழகம், பங்குபெற்ற தன்னார்வலர்கள் என அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
தேவாங்கினை மையமாக கொண்டு மற்ற உயிரினங்களும் அங்கு பிழைத்திருக்கும்.
அந்த காட்டில் இனி எப்போதும் தேவாங்குகள் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும்.
- பு.இரா. விசுவநாத்