நீங்களும் ஆராய்ச்சியாளர்(விஞ்ஞானி) ஆகலாம்! / Citizen science through Season watch

நீங்களும் ஆராய்ச்சியாளர் (விஞ்ஞானி) ஆகலாம்!

ஆம், அதன் அடிப்படையில் நிகழ்ந்த களப்பணி தான் இன்றையது.

நம்மை சுற்றி இயற்கையில் நிகழும் நிகழ்வுகளை காணச்செய்வது, காண்பதோடு கடந்துவிடாமல் அவற்றை பதிவு செய்வது, பதிவு செய்வதென்றால் அதை எப்படி செய்வது, அப்படி பதிவு செய்வதால் என்ன பயன், யாருக்கு பயன் என்று அப்படியே மரங்களின் அருகே அனைவரும் கூடி அறிந்துகொண்டோம்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பருவகாலம் காணல் (SEASON WATCH) என்ற செயலியின் மூலம் குறிப்பிட்ட சில தாவரங்களின் இயல்பை குறிப்பாக அந்த தாவரத்தின் பெயர், அது இருக்கும் இடம், பதிவு செய்யப்படும் நாள் என்ற அடிப்படை தகவல்களோடு தொடங்கி பின் அந்த நாளில் அந்த மரத்தின் இயல்பை கீழ்கண்ட வாறு கவனித்து பதிவுசெய்தல் வேண்டும்.

இலை- புதிய,முற்றிய அல்லது காய்ந்த நிலையில்
பூ – மொட்டாக, விரிந்த மலராக, ஆண் பூ
பழம் – பழுக்காத காய், பழுத்த பழம், வெடித்த காய் அல்லது பழம்
மரத்தின் உயரம் மற்றும் மரத்தின் சுற்றளவு

இந்த தகவல்களை எல்லாம் ஒவ்வொரு காலத்திலும் அது நாளாக, வாரமாக, மாதமாக இருக்கலாம், நமக்கு நேரம் கிடைக்கும் போது, அல்லது இயல்பில் மாற்றங்கள் நிகழும் சமயம் நாம் கண்டு பதிவு செய்வது தான் ஆராய்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் பங்களிப்பு.

 

சரி இப்படி செய்வதால் யாருக்கு என்ன பயன்?
இந்த நிகழ்வுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து பதிவு செய்து உதாரணத்திற்கு ஒரு மரத்தின் ஒவ்வொரு மாத இயல்பையும் பத்து ஆண்டுக்கு பதிவு செய்து, அந்த பத்து ஆண்டில் அந்த தாவரத்தின் இலையுதிர்க்கும் காலத்தில் மாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா,அது போல் துளிர்விடுதல், மொட்டு அரும்புதல், மலர்தல், காய் பிடித்தல், காய் பழமாதல், பழம் வெடித்து விதை சிதறுதல், விதை மண்ணில் விழுந்து முளைத்தல் அனைத்தும் சீராக நடைபெறுதல், பருவம் தவறுதல் என்ற தாவரத்தின் இயல்புகள் கால சூழலின் தாக்கம் காரணமா, மழையின் அளவில் மாறுபாடு, குளிர் காலத்தின் கால அளவும் குளிரின் அளவும், கோடையின் கால அளவும் வெப்பத்திப்பின் அளவும் இப்படி தான் ஆராய்ச்சியின் தொடக்கமும் முடிவுமாக ஒன்று மற்றொன்றோடு கொண்டுள்ள தொடர்பை நாம் அறிந்து காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்ளலாம்.

இதில் பெரிதும் பயனடைவது நமது வரும் தலைமுறை!

சரி நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டுமா?
தொலைக்காட்சி மட்டும் பார்ப்பதை விடுத்து
திரைப்படம் மட்டும் பார்ப்பதை தவிர்த்து
வீட்டுக்குள் மட்டும் இருப்பதாய் தவிர்த்து

 

இனிவரும் காலங்களில் இயற்கையை கவனிக்க தொடங்குவோம்
நம் வீட்டின் தோட்டத்தில், நம் சாலையில், நம் ஊர் புறத்தில் உள்ள தாவரங்களை கவனித்து அதன் இயல்புகளை பதிவு செய்வதன் மூலம் ஆகலாம் நீங்களும் விஞ்ஞானி (ஆராய்ச்சியாளர்).

இன்று எங்கள் ஊர்வனம் குழு சார்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு செயலியை கைபேசியில் எப்படி பதிவிறக்கம் செய்வது மற்றும் முறையே அவைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஊர்வனம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. விஸ்வா அவர்கள் விளக்கினார்.

சரக்கொன்றை மரம், வேப்பமரம், குல்மோகுர், புளிய மரம், நாவல், அரச மரம் நெல்லி, இலந்தை மரங்களின் இயல்புகள் இன்று பதிவுசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து செய்வதற்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் நாம் சிறு முயற்சியை கற்று தெரிந்தால் நாமும் மக்கள் விஞ்ஞானி ஆகலாம். அறிவியலை தூரத்தில் வைப்பது இருட்டில் இருப்பதற்கு சமம், அறிவியல் உங்கள் கைவசம் தான் உள்ளது உங்கள் முயற்சி இந்த உலகின் விடியலுக்கு உதவட்டும்.

செயலி பதிவிறக்கம் செய்ய:

https://play.google.com/store/apps/details?id=seasonwatch.in

ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் குழு
www.wish2helptrust.org
9940832133, 8608700088

Leave a reply