கூதியார்குண்டு கண்மாயின் நீர்வரத்து குறித்து ஆய்வு செய்ய சென்ற இடத்தில் எறும்புகளின் குறிப்பிடத்தக்க ஒரு செயலை காண நேர்ந்தது.பொதுவாக பூமியில் தரைக்கடியில் வசிப்பிடம் உருவாக்கி வாழும் எறும்பு இனங்கள் பல உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு, இளம் வளரிகள், முட்டைகள் என பல உறவுகள்.
பொதுவாக மழைக்காலங்களில் அல்லது எதிர்பாராத வெள்ளப்பெருக்கு அல்லது நீர் சூழும் போது எறும்புகளின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும்.
எறும்புகள் தங்களின் உயிரையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளும்.
நீர் சூழ தனித்து நீந்தி தப்பிப்பது என்பது தவறான முடிவாகும் என்ற அறிவியல் எறும்புகளுக்கு சொல்லிக்கொடுத்தது யார் ? ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்க்கை தத்துவம் எறும்புகளுக்கு சொல்லிக்கொடுத்தது யார் ?
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது வேலைக்கார எறும்புகள் இயற்கையாய் தாங்கள் பெற்ற நீரோடு ஒட்டி ஒட்டாமல் நீந்தும் கால்கள் மற்றும் வெட்டு தாடைகள் கொண்டு ஒன்றோடு ஒன்று பற்றிக்கொண்டு மிதவை தெப்பமாக தண்ணீரில் ஒன்று சேர்ந்து மிதக்கின்றன உயிர்களை காக்க.
தங்கள் குடும்ப உறுப்பினர்களான ராணி எறும்பு, வளரிகள் மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக தெப்பத்தின் மையப்பகுதியில் நீர் ஒட்டாமல் சிறப்பு பாதுகாப்பு தரப்படுகிறது, காரணம் வரும் தலைமுறையின்(வளரிகள்) வழியே தங்கள் இனம் அழிந்து விடாமல் காப்பதற்கு.
இத்தனை முயற்சிக்கு பின்னும் இயற்கையும் சற்று கைகொடுக்க வேண்டும், காற்று வந்து தெப்பத்தை கரைசேர்க்க வேண்டுமே!
முட்டைகளை உண்ண மீன்கள் வந்து தெப்பத்தை களைத்திடாமல் இருக்க வேண்டுமே!
மேட்டு நிலத்தை அடைந்த பின் மீண்டும் புதிய குடியிருப்பு சில மணிநேரங்களில் உருவாக்கப்பட்டு புதிய குடியேற்றம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் நானும் நகர்ந்தேன்.
-பு.இரா. விசுவநாத்