பாம்பாட்டிகள்

உங்கள் அச்சம் தான் என் மூலதனம்!
பாம்பை கொண்டு வித்தை காட்டி, பாம்பை மகுடி ஊதி பிடித்து செல்லும் நண்பர்களுடனான என் சிறு அனுபவம்… நீங்கள் விழித்து கொள்வதற்காக.
அன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது பாம்பாட்டிகள் சிலர் ஒரு வீட்டில் பாம்புகளை பிடிக்க வந்துள்ளனர் என்று. உடனே தோழர் சகாவும் நானும் எங்கள் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.
அது கட்டிட பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு. ஒருவர் கைலி சட்டை அணிந்திருந்தார், கையில் சுருக்குப் பை தாங்கிய படி மகுடியில் ஒரு முனை வாய் வழியே காற்றை ஊதி, மூங்கில் குட்சியில் இடப்பட்டிருந்த துளை வழியே அவர் விரல்கள் அடைத்தும், திறந்தும் இனிமையான இசை வரவழைத்து கொண்டிருந்தார்.
சில நிமிடங்கள் அமைதியாக அவரின் செயல்களை கவனித்தோம். சுற்றிலும் கூடிய மக்கள் மனம் பதட்டப் பட்டிருந்ததை அவர்கள் முகம் வழியே கண்டோம்.
நாங்கள் செல்வதற்கு முன்பே அவர்கள் ஒரு நல்ல பாம்பு, ஒரு கட்டு விரியன் பாம்பை பிடித்துவிட்டதாக கூறினர்.
சரி நமது வேலையை தொடங்க இது சரியான தருணம் என்று களத்தில் இறங்கினோம்.

அண்ணே! மகுடி வாசிக்கிறத நிருத்துறீங்களா?
கொஞ்சம் நீங்க பிடிச்ச பாம்பா காட்டுங்க என்றோம்.

பிடிகப்பட்ட பாம்புகள் வட்ட வடிவ மூங்கில் பெட்டிக்குள் அடைக்கப் பட்டிருந்தன. பெட்டியை திறப்பதற்கு முன் அவர் கையில் வைத்திருந்த சுருக்குப் பையை மூன்று முறை மூங்கில் பெட்டியை சுற்றி மெதுவாக திறந்தார்.

ஆம் உள்ளே ஒரு நல்ல பாம்பு. அவரை வெளியில் எடுக்க சொன்னோம். மெதுவாக வெளியில் எடுத்தார்.
பாம்பின் மூக்கு வழியே சிறு ரத்தம் கசிவதை பார்த்தோம்.
உடனே சகா அவர்கள் பாம்பின் தலையை பிடித்து தூக்கி அதன் வாயை திறந்து சோதனை இட பாம்பின் முன் பற்கள் இரண்டும் பிடுங்கப்பட்டிருந்தது.
பாம்பின் பற்கள் எங்கே என்று கேட்ட உடன்,
பாம்பாட்டிக்கு (பாம்பை ஆடவைப்பவர்) முகம் எல்லாம் வேர்க்க தொடங்கியது. அவரால் ஏதும் பதில் சொல்ல முடியாமல் திணற. சுற்றி இருந்த மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
பாம்பு அங்கு வந்த கதையை மெதுவாக விளக்க தொடங்கினோம்.
அவர்கள் இங்கே பிடித்த பாம்பு அதன் நச்சுப் பல் பிடுங்குபட்டு அவர்களே கொண்டுவந்தது. உங்கள் பயம் உங்கள் கண்ணை மறைத்திருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அதை பயன் படுத்தி அவர்கள் கையிலோ, சுருக்கு பையிலோ, கைலியிலோ மறைத்து வைக்கப்பட்ட பாம்பு உங்கள் கவனத்தை மகுடியிலும், சுருக்குப் பையிலும் ஒருமுகப் படுத்தி உங்கள் இடத்தில் மறைந்து இருக்கும் பாம்பை பிடிப்பது போல் எளிதில் பிடித்து உங்களை நம்ப வைத்து விடுவர்.
கட்டுவிரியன் பாம்பை காட்ட சொன்னோம், அதை காட்ட நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆம் சாதாரண மண்ணுளிப்பாம்பை எடுத்து காட்டி மக்களை கட்டு விரியன் என்று நம்ப வைத்துள்ளனர். மேலும் அது கொடிய நச்சு உள்ள பாம்பு என்றும் கூறி உள்ளனர்.
காரணம் நஞ்சுள்ள பாம்பை பிடித்தால் அதிக விலை ஒரு நல்ல பாம்பை பிடித்தால் ₹500 -₹1000 வரை வசூல் செய்வர்.
சுருக்குப் பை வாங்கி பிரித்து பார்த்தோம் உள்ளே சிறு சிறு வேர்கள், கொட்டைகள் இருந்தன. அவைகளுக்கு பாம்பை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக மக்களை நம்பவைத்து விலை வைக்கின்றனர்.
மேலும் ஒரு சம்பவம், அது மத்திய அரசு அதிகாரிகள் குடியிருப்பு, பாம்பாட்டிகள் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. உடனே வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து களம் கண்டோம்.
மொத்தம் 22க்கு மேல் பாம்புகள் அவர்களிடம் இருந்து பிடிபட்டன. வேடிக்கை என்ன என்றால் அவர்களை அழைத்து பாம்பை பிடிக்க சொன்னவர்கள் பொறியியலில் மெத்த படித்த மத்திய அரசு அதிகாரிகள். அங்கும் உண்மையை விளக்கினோம்.

ஒரு பக்கம் பாம்பை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்றி பணம் ஈட்டுவது தடுக்க முயற்சிகள் எடுத்தாலும், பாம்பாட்டிகள் வாழ்க்கை சூழலை கருத்தில் கொண்டு அவர்களின் சமூகப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற செய்ய ஆராய பட வேண்டியதாக உள்ளது.

ஆம் அவர்களோடு உரையாடினோம், அவர்கள் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். அவர்கள் பல வருடங்களாக பழங்குடி சமூதினர் என்ற அரசு சான்றிதழ் பெற போராடி வருவதாகவும், விலகுகளை வேட்டையாடி, வித்தை காட்டி பிழைத்து வந்த நாங்கள் தற்போது கட்டிட கூலி தொழிலாளர்களாக உள்ளோம் என்று கூறினர்.
அவ்வபோது பாம்புகளை பிடிக்க எங்களை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைக்கும் போது மட்டும் நாங்கள் இப்படி பாம்புகளை பிடிக்க செல்கிறோம் என்றனர். பல நாள் கூலி ஒரு நாளில் எங்களுக்கு கிடைக்கும் ஐயா.
எங்க கூட்டத்த காப்பாத்தனும் ஐயா…
அரசு பழங்குடியினர் சாதி சான்றிதழும் வழங்கல, அதனால எங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதும் குதிரைக்கொம்பு…
வாழ போராடுகிறோம் என்றனர்.
இவர்களோடு நமது ஊர்வனம் குழு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
சமீபத்தில் கேட்டரிங் தொழில் தொடங்க நம்மிடம் உதவி கேட்டிருந்த இளைஞருக்கு நமது குழு சார்பாக T ஷர்ட் கள் அடிக்க பண உதவி செய்தோம்…
மேலும் அவர்களோடு நமது பயணம் என்றும் தொடங்கும்.

Leave a reply