மதுரையின் மையத்தில் பெருகி இருந்த மனித குடியிருப்புக்குள் என் சிட்டுக்குருவிகளும் பெருகி இருந்தன.
அப்போது எனக்கு வயது 9 குறையாமல் இருக்கும், பள்ளி சிறு வயதுக்காலம். அப்போது என் மனதினுள் பதிந்த சிட்டுக்குருவிகள் குறித்த சில காட்சிகள் நினைவில் உள்ள மட்டும் இங்கு பகிர்கிறேன்.
என் சிட்டுக்குருவிகளின் ச்சிவ் ச்சியுவ் என அழகிய குரல் கேட்காத இடம் இருக்காது.
ஒவ்வொரு வீட்டின் வாயிற் கதவு கிரில் கதவின் வழியே வீட்டினுள் செல்வதும், வெளியே வருவதுமாய், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளின் பொழுதுகள். வீட்டினுள் உள்ள பரன் மேல் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும். வீட்டுகாரரும் அதை எவ்விதத்திலும் தொந்தரவென பார்த்ததாக தெரியவில்லை.
வீட்டினுள் முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொறித்த காலம், பகல் பொழுதில் இரை பொறுக்கிக் கொண்டு ஒவ்வொரு முறையும் பெற்றவ(ள்)ர் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட வரும்போது கீச் கீச் என்ற குஞ்சுகளின் கீச்சொலி வீடே நிறைந்து இருக்கும்.
இருந்தும் அதை யாரும் வீட்டின் அமைதியை கெடுப்பதாக பார்க்கவில்லை.
பல்பொருள் அங்காடிகளின் வாசர்புரம் சிதறிக்கிடக்கும் அரிசியும் பருப்பும் தானியங்களும். ஆம் அன்றைக்கு வாடிக்கையாளர் தேவைக்கேற்ப சணல் மூட்டைகளில் இருந்து கேட்கும் அளவிற்கு பொருள் அளந்து விற்கப்பட்டது. மாறாக இன்றைக்கு 500 கிராம் 1கிலோ என்று நெகிழிப்பையில் அடைத்து packing, 100 கிராம் தேவை என்ற வாடிக்கையாளர் இடத்தில் அவரின் தேவைக்கு அதிகமாக வற்புறுத்தி திணிக்க வில்லை.
அன்றைக்கு அரிசியோ பருப்போ அளந்து போடும் போது சில கிராம் கீழே சிதறி விழுந்தன. வாயிற்புறத்தில் நின்றிருந்த சிட்டுக்குருவிகள் தரையில் விழுந்த சில கிராம் உணவை உரிமையோடு தனது உணவாக எடுத்து கொண்டது.
இப்படி ஒவ்வொரு அரிசி மற்றும் தானிய விற்பணையில் சிட்டுக்குருவிகளுக்கும் உணவு வந்து சேர்ந்தது. யாரும் கை உயர்த்தி அதை ச்சூ என்று விரட்டவில்லை. பல சிட்டுக்குருவிகள் கடைகளிலேயே கூடு கட்டி வாழ்வதை பார்த்துள்ளேன்.
கீழே சிந்தும் அரிசியோ தானியமோ வீண் #Waste என்று யாரும் அன்றைக்கு சொல்லவில்லை. ஆனால் இந்த நாகரீக வளர்ச்சி, மெத்த படித்தவர் waste management என்று கூறிக்கொண்டு #கழிவுகளை_குறைக்க வேண்டி அறிமுகப்படுத்தின Packaged Products Sale என் சிட்டுக்குருவிகளின் உணவில் கை வைத்தது.
வாயிற்புற கதவும், சன்னல் கதவும் கொசு வலைகளால் போர்த்தப்பட்டன. சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட இடத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டன. #House_Sparrow losts it’s house…
இப்படிதான் அந்த வரலாற்றில் மாற்றம் நிகழ்ந்து இருக்கும். எது சிட்டுக்குருவிகள் வீடு இழந்த வரலாறு.
1. வீட்டினுள் கூடுகள் கட்ட யாரும் தடையாய் இருக்கவில்லை.
2. பின் கூடுகள் கட்டினால் அதை அகற்றும் பழக்கத்திற்கு வந்தனர்.
3. பின் சிட்டுக்குருவிகள் வீட்டினுள் நுழைந்து கூடுகள் கட்டாமல் இருக்க தேவையான உபகரணம் கொண்டு வீடுகள் கட்டப்பட்டன அல்லது புனரமைக்கப்பட்டன.
சிறு வயதில் விலங்குகள் பறவைகள் மீதான ஆர்வம் அல்லது ஆர்வக்கோளாறு.
சொந்தங்களின் வீட்டிற்கு விடுமுறைக்காக செல்லும் சமயம் பரண் மேல் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி அதில் குஞ்சு இருந்தால், அந்த குஞ்சுகளை நான் வீட்டுக்கு எடுத்து வந்து மண்புழு பட்டாம்பூச்சிகள் ஊட்டி விட்டு வளர்க முயன்று தோற்றுள்ளேன் இல்லை கொலை செய்துள்ளேன்.
சிவகங்கையில் என் சித்தி அவர்கள் குடும்பம் குடியிருந்த சமயம், விடுமுறை நாட்கள் அங்கு பல நாள் கழியும். அவர்கள் குடும்பம் வசித்த அடுக்குமாடி அரசினர் குடியிருப்பு கட்டிட வாயிலில் இருந்த வேப்ப மரத்தில் மாலை கருக்களில் நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் அடையும். அச்சமயம் அவைகள் எழுப்பும் இசை கீச் கீச் என பெரும் கூச்சலாக எழுந்து அடங்கும் இரவில்.
இன்றும் கிராமங்களில் சிட்டுக்குருவிகளை காணலாம். ஓட்டு வீடும், குடிசை வீடும் சிட்டுக்குருவிகள் வீடு கட்ட இடம் அளிக்கின்றன. இரைக்கு கிராமங்களில் பஞ்சம் இல்லை.
இதுவும் கொஞ்ச காலம்…
நாகரீக மற்றும் விஞ்யான வளர்ச்சி கிராமங்களையும் சிதைக்க தெடங்கிவிட்டது…
ஐந்து வருடங்களுக்கு முன் நவி மும்பையில் பணியாற்றிய போது நகர் குடியிருப்பு பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகம் கண்டுள்ளேன்.
சிட்டுக்குருவி அழிவிற்கு செல்போன் அலைகற்றையா? பூச்சிகொல்லி மருந்தா? காரணம் என்று தெரியவில்லை.
ஆனால் என் அனுபவம் சிட்டுக்குருவிகள் அழிவிற்கு, அதன் வாழ்வாதார சூழலை அழித்ததே முழு முதற் காரணம் என்று நான் உணர்ந்த வரையில்…