எட்டு காலும், எட்டு கண்ணும்…

எட்டு காலும், எட்டு கண்ணும்…
#Wolf_Spider #Madurai #Nocturnal #Araneae
#Arachnid
முத்துக்கள் சிதறியது போல் மின்னிற்று, என் நெற்றி மின்கல ஒளிப்பெட்டி வெளிச்சம் பட்டு எங்கள் பாதை எங்கும் ஆங்காங்கே!
ஆகா வேட்டைக்காரன்!

சற்று நெருங்கி பார்த்தோம் அது உல்ஃப் ஸ்பைடர்…ஆங்கிலத்தில் (WOLF SPIDER).
இவைகள் சிறந்த வேட்டைக்காரர்கள் மற்றும் சமூக வாழ் இயல்பில் தனித்து வாழும் சிலந்திகள் #சிலந்தி இனங்கள் இவை.

மற்ற பல சிலந்திகள் போல் வலை பின்னி இரை சிக்குவதற்கு காத்திருப்பது கிடையாது, பெரும்பாலும் அவைகள் வெட்டிய பொறிக்குள் மறைந்து இருந்து இரை பூச்சிகள் அதனை கடக்கும் போது எதிர்பாராத வேகத்தில் தாக்குதல் நடத்தி வேட்டையாடும். மேலும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தன் இரையை தாவிப் பிடிப்பது அல்லது சிறிது தூரம் துரத்திப் பிடிப்பது என்பது இவைகளின் உணவு வேட்டை தன்மையாகும். உணவுக்காக வேட்டை பெரும்பாலும் இரவில் மட்டுமே.

இவைகளின் கண் பார்வை அபாரமானது, மேலும் அது மூன்றடுக்கு வரிசையில் பொருத்தப் பட்டுள்ளது. முதல் நான்கு சிறிய கண்கள் கீழ் வரிசையில், இரண்டு பெரிய கண்கள் நடு வரிசையில் மற்றும் மேல் வரிசையில் இரண்டு சிறிய கண்கள்.இவ்வகை சிலந்திகளின் கண்களில் ஒளி எதிரொலிக்கும் திரை உள்ளதால், நாம் அதன் மீது வெளிச்சம் செலுத்த, கண்களில் ஒளி பட்டு எதிரொளிப்பு முத்துக்கள் மின்னுவது போல் காட்சியளிக்கும்.

தங்கள் உடம்பில் உள்ள உரோமங்கள் தொடு உணர்வு மிக்கவை, ஆகையால் அவைகளை நெருங்கும் உயிர்களை அறிய உதவுகிறது.

பெண் சிலந்திகள் தங்கள் வயிற்றின் அடிப்பகுதியில், நூழ்பீலை துவார முனையில் நூலாம்படை யினால் செய்யப்பட்ட பையில் தங்கள் முட்டையை குட்டிகள் பொறிக்கும் வரை சுமந்துகொண்டு வாழும். பின் குட்டிகள் பொறிந்த பின் தாயின் உடம்பில் குட்டிகள் தொற்றிக்கொள்ளும். குட்டிகள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு வளரும் வரை தாயின் அரவணைப்பில் இருக்கும். இந்த தாய்மை பண்பு இவ்வகை சிலந்தி இனத்தில் மட்டுமே இதுவரை காணப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

நாமும் நம்மை சுற்றியுள்ள பல்லுயிர்களின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவோம்.

ஆபத்தெல்லாம் இல்லை, அழகிய உயிரினம்…

மதுரையில் கண்டது!
இந்த இரவாடியை காண நீங்களும் இரவாடியாக மாறனும்!

Leave a reply